ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.
இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை பிறக்கும் காலம்
ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.
37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.
41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.
குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
பிறக்கும் குழந்தையின் எடை
ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.
எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம்.
உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.
பராமரிப்பில் முக்கியமானவை:
தாய்ப்பால் கொடுத்தல்
மசாஜ்
குளிப்பாட்டுதல்,
தோல் பராமரிப்பு
கண்கள், தொப்புள் கொடி பராமரிப்பு
எடை
தடுப்பு ஊசிகள்
பிற உணவுகள் கொடுத்தல்
தாய்ப்பால்
தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.
இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.
தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:
தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.
தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.
குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.
கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.
குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.
பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.
அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.
குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?
குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.
நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.
சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.
சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.
ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.
குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். 1 ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.
சில தகவல்கள்.....
கொலஸ்ட்ரம்
பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.
தாய்ப்பால்
பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.
ஊட்டும் போது முதலில் வரும் பால்
பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.
கடைசியில் வரும் பால்
பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.
தடுப்பூசி: பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.
Nantri - Kumutham health
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக