வெள்ளி, 26 நவம்பர், 2010

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன?

அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.

இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.

இதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்? மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:

பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.

சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும்.

இதற்கு "ஆஞ்சைனா’ என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.

மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்

மண்ணீரலின் பணிகள்

மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனிதன் நோயின்றி வாழமுடியும். இந்த உறுப்புகளில் மனித இயக்கத்திற்கு பிரதானமான சில உறுப்புகள் உள்ளன. அவற்றில் மண்ணீரலும் ஒன்று.

மண்ணீரலானது கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும். நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான். இது ரெட்டிக்குலர் செல்கள் (Reticular cells) மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது. மண்ணீரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது.

மூளையின் செயல் பாடுகளையும், நரம்புகளின் தூண்டுதலையும் சீராக்குகிறது. எண்ணங்களையும் செயல்களையும், உருவாக்குவதும், ஊக்குவிப்பதும் மண்ணீரல்தான். முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களை அழிக்கும் செயலே மண்ணீரலுக்கு முக்கிய வேலையாகும். இரத்த சிவப்பணுக்களின் செயல்பாடுகளை சீர்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் மண்ணீரலின் முக்கிய பணியாகும்.

மண்ணீரல் பாதித்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகும். சில சமயங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் கொடுத்து மாரடைப்பைக்கூட (Heart attack) ஏற்படுத்துகிறது. நுரையீரலின் செயல் பாடுகளிலும் மண்ணீரலுக்கு பங்குண்டு. இரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண் கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல் பாடுகளை தூண்டுகிறது. அதுபோல் இரத்த ஓட்டப் பாதையில் கிருமிகள் போன்ற வெளிப் பொருட்களை வடிகட்டி வெளியேற்றும் உறுப்பாகவும் மண்ணீரல் செயல்படுகிறது.

இரத்தம் வழியாக வரும் நோய்க்கு எதிரான தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதே மண்ணீரலின் முக்கிய பணியாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வியர்வை சுரப்பிகளைத் தூண்டுகிறது. மன வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

மண்ணீரல் பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள்

உடம்பின் எடை அதிகரித்தல்,

அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாதல்,

நாக்கு வறண்டு விறைப்புத் தன்மையடைதல்,

வாயுக்களால் உடலெங்கும் வலி உண்டாதல்,

வாந்தி, உடல் பலவீனமடைதல்,

உடல் பாரமாக தெரிதல்,

கால் பகுதிகளில் வீக்கம், வலி,

சாப்பிட்டவுடன் தூக்கம்,

எப்போதும் சோர்வு,

இடுப்பு பக்கவாட்டு மடிப்புகளுடன் சதை உண்டாதல்,

மஞ்சள் காமாலை ஏற்படுதல்,

இரத்த அழுத்தம் அதிகரித்தல்,

சிறுநீர் சரியாக பிரியாதிருத்தல்.

மண்ணீரல் பாதிப்பு ஏற்படக் காரணம்

· மன அழுத்தம்,

கோபம், எரிச்சல் அடிக்கடி ஏற்படுவோர்க்கு மண்ணீரல் பாதிப்படையும்.

· மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போன்ற வற்றாலும் இந்நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

· கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்படையும்.

· இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பு காரணமாக மண்ணீரலில் பாதிப்பு உண்டாகும்.

· இதயத்திற்கு இரத்தம் செல்வதுபோல் மண்ணீரலும் இரத்தத்தை உள்வாங்குகிறது.

· கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் இவைகளால் மண்ணீரல் பாதிக்கப்படலாம்.

மண்ணீரலைப் பலப்படுத்தும் உணவுகள்

கீரைகள், காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயிறு, சின்ன வெங்காயம். கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ். இவற்றில் உள்ள மெத்தியோனின் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், மண்ணீரல், பித்தநீர் சுரப்பிகளின் இயக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது.


திங்கள், 8 நவம்பர், 2010

அரசமரத்தின் மருத்துவ குணங்கள்


புவியில் வாழும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பது மரங்கள்தான். மரங்கள்தான் சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை உள்வாங்கி, குளோரோபில் மூலம் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இதனாலேயே தாம் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர்.

அப்படி நம் முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று. இன்று குளக்கரை, கோவில்களில் அரச மரம் இல்லாத கிராமங்களை நாம் காண முடியாது. நீண்ட காலம் வாழும் அரச மரங்கள் தெய்வமாக போற்றப்படுகின்றன. வேம்பை பெண் தெய்வமாக வணங்குவார்கள்.

அரச மரத்தை ஆண்தெய்வமாக வணங்குவர். பெரும்பாலும் அரச மரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப்பேறை உண்டாக்கும்.

சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது.

இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் பாரத பூமிதான். நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.

இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும். முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.

அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.

அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும். வெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.

அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

அரச மரத்தின் பாலை எடுத்து பாத வெடிப்புகள் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் பித்த வெடிப்புகள் விரைவில் மறையும். அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால், மன அழுத்தம், மன எரிச்சல், அதீத கோபம், தீரா சிந்தனை போன்றவை தீரும்.

அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்

வெள்ளி, 5 நவம்பர், 2010

குழந்தைக்கு வாந்தி


சாப்பிட்ட உணவுப் பொருள்கள், வயிற்றுக்குள் இருந்து வாய் வழியாக வெளிவருவதுதான் வாந்தி. பல காரணங்களால் வாந்தி வரும். அவற்றில் சில உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை.

காரணங்கள்

அண்மையில் பிறந்த குழந்தைகள்

1. குடல் பாகம் இல்லாதிருத்தல்

2. குடல் இடம் மாற்றம்

3. வால்வுலஸ்

4. ரத்தத்தில் நோய்க் கிருமிகள்

5. மூளைக்காய்ச்சல்

6. மூச்சுத் திணறல்

7. மூளையின் நீர் அதிகமாதல்

8-. தவறான முறையில் பால் புகட்டுதல்

ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்

1. தவறான முறையில் பால் புகட்டுதல்

2. அதிகப் பால் கொடுத்தல்

3. பிறப்பிலேயே குடல் வீங்கி அடைத்துக் கொள்ளுதல்

4. பேதி

5. மூளையில் கிருமிகள் தாக்கம்

6. மூளையில் ரத்தக்கட்டு

7. மூளையில் நீர் அதிகமாதல்

8. மாட்டுப்பால் அலர்ஜி

சிறுவர்கள்

1. மனநிலை பாதிப்பு

2. சிறுநீரில் கிருமி

3. மஞ்சள் காமாலை

4. நீரிழிவு நோய்

5. நிமோனியா காய்ச்சல்

6. குடல் அடைப்பு

7. மூளையில் ஏற்படும் ரத்தக் கட்டி

8. மூளைப் புற்றுநோய்

சிகிச்சை

நிறைய குழந்தைகள் சாதாரணமாகவே சிறு சிறு காரணங்களுக்காக வாந்தி எடுப்பார்கள். அதனால் பயப்பட வேண்டாம். சர்க்கரை & உப்புக் கரைசலை ORS கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் போதும். சில குழந்தைகள் வாந்தி எடுத்தாலும், அவற்றின் உடல் எடை மற்றும் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்குச் சிகிச்சை தேவையில்லை.

அடிக்கடி வாந்தியோ, தொடர் வாந்தியோ இருந்தால், அவற்றுடன் வேறு நோய்கள் ஏதாவது இருந்தாலும், குழந்தையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து சாயான சிகிச்சை அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் தாமாகவே சிகிச்சை அளிக்கவோ, வீட்டில் இரக்கும் மருந்துகளைக் கொடுக்கவே கூடாது. அதனால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்