வியாழன், 8 ஜூலை, 2010

விஞ்ஞானிகள் உருவாக்கும் செயற்கை நுரையீரல்


மனிதனின் நுரையீரலை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவில் ஏல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர் இதற்காக முதல் எலியின் நுரையீரலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் எலி நுரையீரலின் செல்லை எடுத்து அதை வளரச் செய்து அதன் மூலம் நுரையீரலை உருவாக்கினார்கள்.

அது எலி நுரையீரல் போலவே திறம்பட செயற் பட்டது ஆய்வகத்தில் வைத்து நடத்தப் பட்ட இந்த சோதனையில் சுவாசிக்கும் காற்றில் இருந்து நுரையீரல் உயிரகம் (ஆக்சிஜன்)கரிமிலவாயுவை (கார்பன்டை ஆக்சைட்)பிரிக்கும் வேலையை சரியாக செய்து அதில் ஆக்சிஜனை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் சேர்க்கும் பணியையும் செய்தது இந்த நுரையீரலை 215நிமிடத்தில் இருந்து 120 நிமிடம் வரை சரியாக செயல்பட்டது.

திங்கள், 5 ஜூலை, 2010

இதயம் எப்படி இயங்குகிறது?

இதயம் எப்படி இயங்குகிறது? இந்தக் கேள்விக்கான பதிலைச் சொன்னால் எளிமையாக இருப்பதுபோல்தான் தோன்றும். ஆனால் அதன் நடைமுறை மிகவும் நுட்பமானது, நுண்ணியமானது.

பயன்படுத்தப்பட்ட அசுத்தமான ரத்தம், நமது உடலின் பல பகுதிகளில் இருந்து பலவகையான சிறிய சிரைகளின் (Veins) வழியாக இதயத்தின் வலப்பக்க மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வலப்பக்க கீழ் அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு இந்த ரத்தமானது நுரையீரல் தமனியின் வழியாக நுரையீரல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
நுரையீரல்களில் என்ன நடக்கிறது?
நுரையீரல்களில் ரத்தமானது தூயமையாக்கப்பட்டு உயிர்வளி (அ) பிராண வாவு (அ) ஆக்ஸிஜன் (oxygen) சேர்க்கப்படுகிறது. பிறகு சுத்தம் செய்யப்பட்ட ரத்தமானது நுரையீரல் சிரையின் வழியாக இதயத்தின் இடப்புறம் உள்ள மேல் அறையை அடைந்து அடுத்து இதயத்தின் கீழ் அறையை அடைகிறது, இதயம் சுருங்கும்போது கீழ் அறையில் இருந்து ரத்தம் வெளியேறி மகா தமனியின் வழியாக ஆங்காங்கே உள்ள பலவகையான கிளைகளின் வழியாக உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதயம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் அதில் உள்ள உயிர் தரும் அமைப்புகளும், கழிவுகளை அகற்றும் அமைப்புகளும் நன்றாகச் செயல்பட வேண்டும். தமனிகள்தான் உயிர் தரும் அமைப்புகள் (LIFE GIVERS) என குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால் இந்த வகை ரத்தக் குழாய்கள்தான் நமது உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உயிர்வளி, உயிர்சத்துகள், ஹார்மோன்கள், உணவு ஆகியவற்றை இடைவிடாது 24 மணி நேரமும் அளிக்கின்றன.
சிரைகள்தான் கழிவுப் பொருள்கள் அகற்றும் அமைப்புகள் (GARBAGE DISPOSAL PARTS) எனப்படுகின்றன. இந்த வகை ரத்தக் குழாய்களும் நன்றாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால் இந்த அமைப்புகள்தான் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான திசுக்களில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருள்களை ரத்தத்தின் மூலமாக இதயத்துக்குக் கொண்டு வருகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் மட்டுமல்லாது. இதயத்தின் வால்வுகளும் நன்றாகச் செயல்பட வேண்டும், அப்போதுதான் இதயத்தின் பணி சிறப்பாக நடக்கும்.
மேலோட்டமாகப் பார்த்தால் ஒற்றை விசை அமைப்புபோல் இதயத்தின் இரண்டு பக்கங்களையும் சுருங்கி விரிந்து ரத்தத்தைப்பெறும் வேலையையும், அனுப்பும் வேலையையும் செய்வதுபோல் தோன்றும். ஆனால் இதயத்தின் வலப்பக்கம் தனி விசையாகவும், இடப்பக்கம் தனி விசை அமைப்பைக் கொண்டதாகவே கருதப்படுகிறது.
இதயம் துடித்துக் கொண்டிருப்பது ஒன்று. அப்படியானால் இதயம் எந்நேரமும் இயங்கிக் கொண்டேதான் இருக்குமா? அதற்கு ஓய்வு என்பதே கிடையாதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பொதுவாக நம் இதயம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து செயல்படுவது போல் தோன்றும்.
ஆனால் உண்மை நிலை அதுவல்ல.
எந்த உறுப்பாக இருந்தாலும் அது நீண்ட நாள்களுக்கு நன்றாகச் செயல்பட சற்று ஓய்வு தேவை. இதயத்துக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால் மற்ற உறுப்புகளைப்போல் இதயம் ஓய்வு எடுத்தால் நமது நிலை என்னவாகும்?
இதயம் இயங்கிக் கொண்டே ஓய்வு எடுத்துக் கொள்ள இயற்கையே சில விந்தையான வழிமுறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு முறையும்
சுருங்கி விரியும்போது கிடைக்கும். அரை நொடிப் பொழுதை (Half a second) இதயம் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்கிறது.
இதுபோல் இரவில் தூங்கும் போது நம் உடலில் உள் மிகவும் நுண்ணிய ரத்தக் குழாய்களுக்குத் தேவையான ரத்தத்தை அனுப்புவதை ஓரளவு குறைத்துக் கொள்வதன் மூலமாகவும், இதயமானது தன்னுடைய வேலைத்திறனை குறைத்து ஓய்வு எடுத்துக் கொள்கிறது.
லப், டப்& இவை இதயத்தின் துடிப்பைக் குறிக்கும் சொற்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதயத்தில் இருந்து எழும் இந்த ஒலிதான் அது இயங்குவதற்கான அறிகுறி.
அமைதியான நேரத்தில் மற்றவரின் நெஞ்சுப் பகுதியில் கூர்மையாக உங்கள் காதை வைத்தோ அல்லது மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப் என்ற கருவியை உங்கள் மார்பில் இடப்பக்கத்தில் வைத்தோ உன்னிப்பாகக் கவனித்தால் இதயத்தின் லப், டப் சத்தத்தை கேட்கலாம்.
முதலில் ஏற்படுவது லப் என்ற ஒலியாகும். இந்த ஒலி ஒரு நொடியில் 10&ல் ஒரு பங்கு நேரம் கேட்கும். இந்த ஒலியை கதவை மூடும் சத்தத்துக்கு ஒப்பிடலாம். இந்த ஒலியானது இதயத்தின் மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் இடையே உள்ள இரண்டு வால்வுகள் மூடுவதாலும் இந்த அறைகளில் உள்ள தசைகள் சுருங்குவதாலும் ஏற்படுகிறது.
இரண்டாவது ஒலியான டப் இதயத் தமனிகளில் உள்ள வால்வுகள் மூடுவதால் ஏற்படுகிறது.
இதயம் தொடர்பாக இன்னோர் ஆச்சரியமான தகவலைச் சொல்லட்டுமா? இதயம் என்பது மின் ஆற்றலால் இயக்கப்படும் ஓர் உறுப்பு. இன்னும் டெக்னிக்கலாகச் சொல்லப்போனால் மின்சாரத்தால் இயக்கப்படும் பம்பிங் (pump) எந்திரம். நம் உடலுக்குள் ஏது மின்சாரம் என நீங்கள் நம்ப முடியாமல் கேட்பது புரிகிறது.
இதயம் தனக்குத் தேவையான மின் ஆற்றலை (Electric power) தானே உற்பத்தி செய்து தன்னைத் தானே தொடர்ந்து இயக்கிக்
கொண்டிருக்கிறது. இந்த மின் ஆற்றலை இதயம் எப்படி உற்பத்தி செய்கிறது? அதற்காகவே ஒரு சிறப்பு அமைப்பு இதயத்துக்குள் அமைந்துள்ளது.
இதயத்தின் வலது பக்க மேல் அறையின் மேற்பகுதியில் நரம்புகளாலும், தசை நார்களாலும் உருவாக்கப்பட்டுள்ள முடிச்சு போன்ற அமைப்பு உள்ளது. இந்த நரம்புத் தசை முடிச்சை ஆங்கிலத்தில் சைனோ& ஆக்டீரியல் நோடு (Sino Arterial Node) என்று சொல்வார்கள். சுருக்கமாக எஸ்.ஏ.நோடு (S.A.Node) என்றும் சொல்வார்கள். இந்த அமைப்பை மோட்டார்களில் உள்ள மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் அமைப்போடு ஒப்படலாம்.
இதயத்துக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறிய மின் உற்பத்தி அமைப்பானது நிமிடத்துக்கு 72 முறை என்ற எண்ணிக்கையில் மின்பொறியை அல்லது மின் ஆற்றலை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இதய மேல் அறையில் தொடங்கும் மின் ஆற்றலானது. மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே அமைந்துள்ள மற்றொரு நரம்பு முடிச்சு அமைப்புவரை (NODE) ஒரே சீராகப் பரவுகிறது. இங்கிருந்து இந்த மின் ஆற்றல், ஒரே சீராக இதயத்தின் இடப்பக்கம் உள்ள கீழ் அறையின் கடைசிப் பகுதிவரை பரவுகிறது.
இவ்வாறு மின் ஆற்றல் ஒவ்வொரு முறையும் சீராக இதயம் முழுவதும் பரவுவதால் இதயம் இயக்கப்படுகிறது. மின் ஆற்றலால் இதயம் நிமிடத்துககு 72 முறை என்ற அளவில் துடிக்கிறது.
உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் இயங்குவதற்கு ரத்தமும், அதன்மூலம் கடத்தப்படும் பிராண வாயுவும் தேவை என்பது எல்லோரும் அறிந்ததே. அப்படியானால் இதயம் இயங்கவும் ரத்தம் தேலை இல்லையா, அந்த ரத்தத்தை இதயம் எப்படி பெறுகிறது?
ஒரு வங்கியில் சாதாரணமாகப் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய வங்கியில் அலுவலக நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளைக் கையாண்டாலும், தன்னுடைய சொந்தத் தேவைக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்தமுடியாது. மாறாக வங்கியில் இருந்து மாத ஊதியமாகப் பெறும் பணத்தை மட்டும்தான் தன்னுடைய சொந்தத் தேவைக்காகவும், தன்னுடைய குடும்பச் செலவுக்காகவும் பயன்படுத்த இயலும். இதுபோல் இதயம் தன்னுடைய அறைகளில் கரை புரண்டு ஓடும் தூய்மையான ரத்தத்தை தான் இயங்குவதற்காக நேரிமையாகப் பயன்படுத்துவதில்லை. மாறாக உடலின் மிகப்பெரிய ரத்தக் குழாயாகிய மகா தமனியில் (Aorta) இருந்து முதல் கிளைகளாகப் பிரியும் இதயத் தமனிகள் (CORONARY ARTERIES) மூலமாகத் தனக்குத் தேவையான ரத்தத்தை இதயம் பெறுகிறது. மகா தமனியின் இருந்து முதல் கிளைகளாக மூன்று தமனிகள் பிரிகின்றன. இந்த மூன்று ரத்தக் குழாய்கள்தான் இதயம் இயங்குவதற்குத் தேவையான உயிர்வளி, ரத்தம், ஊட்டச் சத்துகள் ஆகியவற்றை வழங்குகின்றன. குளிர்பானங்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தும் உறிஞ்சும் குழல்களின் (STRAWS) அளவில்தான இதயத் தமனிகள் இருக்கும்.
மனிதனின் மொத் எடையில் இதயமானது 200&ல் ஒரு பங்கு என்ற அளவில்தான் இருக்கிறது. அளவு சிறயதாக இருந்தாலும், மனிதனின்
உடலில் ஓடிக்கொண்டிருக்கும் மொத்த அளவில் 200&ல் ஒரு பங்கு அளவுள்ள ரத்தத்தை இதயம் பயன்படுத்திக் கொள்கிறது.
இதயத்துக்கு ரத்தம் அளிக்கும் ரத்தக் குழாய்களை ஆங்கிலத்தில் (CORONARY ARTERIES) என்று அழைப்பார்கள். இந்த ரத்ததக் குழாய்கள் அனைத்தும் இன்னும் பல சிறு கிளைகளாகப் பிரிந்து இதயத்தை ஒருவலைபோல் போர்த்தியுள்ளன.
(CORONARY ARTERIES) என்ற பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. லத்தீன் மொழியில் கொரானா (CORONA) என்றால் மகுடம்
அல்லது மணிமுடி என்பது பொருள். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மேலை நாடுகளில் முட்கள் போன்ற அமைப்புடைய கிரீடத்தை மன்னர்கள் தங்கள் மகுடமாக அணிந்து கொள்வது வழக்கம். எனவேதான் இதய ரத்தக் குழாய்களுக்கு இந்தப் பெயர் வந்தது.
இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களுக்கும் உடலின் மற்ற பகுதியில் உள்ள ரத்தக் குழாய்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதயத் தமனிகள், இதயத்தின் இடைவிடாத இயக்கத்துக்கு ஏற்றவாறு இயற்கையாகவே நெகிழ்ந்து விரிந்து கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதயம் விரிவடையும்போது இந்த ரத்தக் குழாய்கள் நன்கு விரிவடைந்து, தங்களுக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக்கொள்கின்றன.
இதுபோல் இதயம் சுருங்கும் போது இதயத்தின் ரத்தக் குழாய்கள் நன்றாகச் சுருங்கி ரத்தத்தை வெளியேற்றுகின்றன.
இதயம் & சில ஆச்சரியமான உண்மைகள்
மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று இதயம்.
இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி
உயரத்துக்கு தூக்க முடியும்.
இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் உடலில் உள்ள மொத்தம் சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தத்தை அனுப்புகிறது. இந்த ரத்தக் குழாய்களின் மொத்த நீளமானது நம் நாட்டில் உள்ள ரயில்வே இரும்புப் பாதையன் மொத்த நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம்.
மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம் பெற்றுள்ளது. இதயத்தைப் பிணைத்திருக்கும் பலவகையான நரம்பு அமைப்புகளை முழுமையாகத் துண்டித்துவிட்டால்கூட, இதயம் எந்தவிதமான பாதிப்புக்கும் ஆளாகாமல், தானாகவே இயங்கும் ஆற்றல் பெற்றது.
ஒவ்வொரு நாளும் இதயமானது ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குகிறது. இந்தக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 70 ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது.
ஒரு நாளில் இதயமாவது 1800 காலன் (7200 லிட்டர்) அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. இந்த அளவில்
கணக்கிட்டால் இதயமானது ஒரு மனிதனின் வாழ்நாளில் சுமார் 4.6 கோடி காலன அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது.
இதயத்தின் ஆற்றலானது (Power) ஒரு குதிரையின் ஆற்றலில் (Horse Power) 240&ல் ஒரு பங்கு.
இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் சுமார் 11 பிண்ட் (PINT) அளவுள்ள ரத்தத்தை ரத்தக் குழாய்களின் மூலமாக உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது.
இதயமானது ஓர் ஆண்டில் வெளியேற்றும் ரத்தத்தின் அளவானது 6.5 லட்சம் காலன்கள். இந்த அளவு ரத்தத்தைக் கொண்டு 900 காலன்
கொள்ளளவு கொண்ட 72 லாரிகளை நிரப்பலாம்.
ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது வெளிப்படுத்தும் ஆற்றலை ஒன்றாகத் திரட்டினால் அந்த ஆற்றலால் ஒரு டன் எடையுள்ள
பொருளைத் தரையில் இருந்து சுமார் 150 மைல் உயரத்துக்குத் தூக்க முடியும்.