வெள்ளி, 28 மார்ச், 2014

பொடுகை விரட்டும் கூந்தல் தைலம்

கார்மேகக் கூந்தலுடன் உலாவர விரும்புகிறவர்களுக்கு கரிசலாங்கண்ணி சாறு தைலம், ஒரு வரப்பிரசாதம்! கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். 

இந்தச் சாறு - 3 கப், 
கீழா நெல்லி இலைச்சாறு - 1கப், 
பொன்னாங்கண்ணி இலைச்சாறு - 1கப், 
எலுமிச்சை சாறு - 1 கப்... 

இவற்றை 6 கப் நல்லெண்ணெயுடன் கலந்து அரை மணி நேரம் அடுப்பில் வையுங்கள். `சட சட' வென்ற ஓசை அடங்கி, தைல பதத்தில் வந்ததும், காயவைத்த நெல்லிக்காய் பவுடர் - 10 கிராமை இதில் போடுங்கள் பிறகு, அடுப்பை அனைத்து விடுங்கள். 

இந்த தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வர, முடி `கரு கரு'வென்று வளரத் தொடங்கும். பேன் மற்றும் பொடுகினால் அவதிப்படுகிறவர்களுக்கான ஸ்பெஷல் கரிசலாங்கண்ணி தைலம் இது. 

பச்சை கரிசலாங்கண்ணி இலை இடித்த சாறு - 2கப், 
அருகம்புல் சாறு - 2 கப், 
தேங்காய் எண்ணெய் - 2கப்.. 

இவற்றுடன் 1 கப் தேங்காய்ப் பால் கலந்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள். நீர்ப்பதம் போய், தைல பதத்தில் வந்ததும் இறக்கி விடுங்கள். தினமும் தலைக்கு எண்ணெய்க்கு பதிலாக இந்த தைலத்தை தேய்த்து வாருங்கள். 

இது பொடுகையும் பேனையும் ஓட ஓட விரட்டியடிப்பதால், தலை சூப்பர் சுத்தமாகிவிடும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய செய்யும் ஓட்ஸ்

அழகு நிலையம் செல்லாமல், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே முகத்தில் கரும்புள்ளிகளை நீக்கி எழில் பெறலாம். அதற்கான குறிப்புகள் இதோ... 


* உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும். 

* வெந்தயக் கீரையை நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும். 

* கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பசை போல் முகத்தில் தடவி காயவைத்து கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இருமுறை செய்யலாம். 

* எலுமிச்சைச் சாற்றுடன் சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் 'மசாஜ்' செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் 'பளிச்'சென்று ஆகும். 

* கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்தாக, ஓட்ஸை பொடிசெய்து, பன்னீருடன் கலந்து முகத்துக்குத் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 

* இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து தடவிவந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும். 

* தக்காளியை கூழாக்கி, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்துப் பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகளை நீக்கி விடலாம். 

* பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் காணாமல்போய்விடும்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பார்வைக் கோளாறை சரிசெய்யும் கேரட்டின் மற்ற நன்மைகள்! ! ! !


காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதன் சுவையாலேயே, இதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு கேரட்என்றால் மிகவும் பிடிக்கும்.

இத்தகைய கேரட்டில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அனைவருக்கும் தெரிந்தது, கண் பார்வை கூர்மையாகும் என்பது தான். ஆனால் அதைத் தவிர, அதனை சாப்பிட்டால் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.

எனவே இத்தகைய கேரட்டை உணவில் அதிகம் சாப்பிட்டால், நல்ல பார்வை மட்டுமின்றி, வேறு சில உடல் பிரச்சனைகளையும்தடுக்கலாம். இப்போது அந்த கேரட் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

1) புற்றுநோய் :

நிறைய ஆய்வுகளில் கேரட் அதிகம் சாப்பிட்டால், மார்பகம், கல்லீரல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி தற்போது மேற்கொண்ட ஒரு ஆய்விலும், கேரட்டில் ஃபால்கரிநால் எனப்படும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

2) பார்வை கோளாறு :

கண்களில் உள்ள ரெட்டினாவின் செயல்பாட்டிற்குவைட்டமின் ஏ சத்து மிகவும் இன்றியமையாதது. அத்தகைய வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் தான், மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. எனவே கேரட்டை தினமும் உணவில் சேர்த்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டின், கண்களுக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்தைக் கொடுக்கும்.

3) இதய நோய் :

ஆய்வுகளில் கேரட்டில் கரோட்டினாய்டுகள் அதிகமான அளவில் இருப்பதால், அதனை அதிகம் சாப்பிடுவோருக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு என்று சொல்கிறது. மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டல், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்துவிடும்.

4) பக்கவாதம் :

ஹாவர்ட் பல்கலைகழகத்தில்மேற்கொண்ட ஆய்வில், வாரத்திற்கு ஆறு கேரட்டிற்கு மேல் சாப்பிடுபவர்களைவிட, குறைவாக சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம்விரைவில் தாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

5) பொலிவான சருமம் :

கேரட்டில் நல்ல அளவில் கிளின்சிங் தன்மை இருப்பதால், அதனை சாப்பிட கல்லீரலில் தங்கும் கொழுப்புக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேறுவதோடு, இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை அகற்றி, முகப்பருக்கள் வருவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் இதர சத்துக்கள், சரும வறட்சியை போக்கி, முகத்தை பொலிவோடு வைக்க உதவும்.

6) முதுமை :

கேரட்டில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டினால், உடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் முதுமைத் தோற்றத்தை தரும் பாதிக்கப்பட்ட சரும செல்களை குணப்படுத்தி, இளமையான தோற்றத்தை நீண்ட நாட்கள் வைத்திருக்க உதவும்.

7) ஆரோக்கியமான பற்கள் :

கேரட் சாப்பிட்டால், பற்கள் நன்கு சுத்தமாக இருக்கும். மேலும் இது பற்கள் மற்றும் ஈறுகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளை முற்றிலும் அகற்றிவிடும். அதுமட்டுமின்றி,கேரட் சாப்பிட்டால், வாயில் எச்சிலின் சுரப்பு அதிகரிக்கும்.

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்...!


மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

சித்த மருத்துவக் குறிப்புகள்

1.நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2.தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3.தொண்டை கரகரப்பு:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4.தொடர் விக்கல்:
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5.வாய் நாற்றம்:
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6.உதட்டு வெடிப்பு:
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7.அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8.குடல்புண்:
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9.வாயு தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10.வயிற்று வலி:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11.மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12.சீதபேதி:
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13.பித்த வெடிப்பு:
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14.மூச்சுப்பிடிப்பு:
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15.சரும நோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16.தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17.மூலம்:
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18.தீப்புண்:
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19.மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20.வரட்டு இருமல்:
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்