வெள்ளி, 6 மே, 2011

சுத்தமான குடி நீரை செலவில்லாமல் வீட்டிலயே தயார் பண்ணலாம் !

உலகின் மொத்த நீர் வளத்தையும் மனித குலம் நாசம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அதுவும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் சுகாதாரமான குடிநீர் கிடைக்காத அவல‌நிலை இருக்கின்ற வேளையில், இலவசமாக அரிசி வாங்கிச் சாப்பிட்டாலும், குடிப்பதற்கு நீர் விலைக்கு வாங்க நேரிட்ட வேளையில் இன்பத் தேன் வந்து பாய்வதை நம் காது கேட்காமல் போய்விட்டது.

உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் பல ஆய்வு நிறுவனங்கள் பல்வேறு சோதனைகள் நிகழ்த்திக் கதிரவன் மூலம் நீரைக் குடிநீராக மாற்றும் எளிய வழியைக் கண்டறிந்து மூன்றாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி இருக்கின்றது.

SODIS (SOlar water DISinfection) என்ற இந்த முறையைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. சரி இந்த சூரியக் கிருமிநாசினி முறையைப் பற்றிச் சற்று விரிவாகக் காணலாம்.

கதிரவனின் கதிர்களில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத A-புற ஊதாக் கதிர்கள் நீரில் கலந்திருக்கும் பாக்டீரியாவின் செல்லமைப்பைச் சிதைக்கின்ற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட புற ஊதாக் கதிர்கள் நீரிலிருக்கும் பிராணவாயுவுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் பெராக்ஸைடாக மாறிக் கிருமிகளை அழிக்கின்றன.

மேலும் அகச்சிவப்புக் கதிர்கள் நீரைச் சூடாக்குவதால் மேலே குறிப்பிட்ட இருவினைகளும் மிக வேகமாக நிகழ்கின்றன.

இந்த முறையைப் பயன்படுத்துவது எப்படி? இதற்கென்று தனியான தொழிற்சாலைகள் நிறுவ வேண்டுமா?


மேலே குறிப்பிட்டவாறு,

1. சுத்தமான வண்ணமில்லா ஒளிபுகும் பிளாஸ்டிக் போத்தல்களை (2 லிட்டருக்கும் குறைவான அளவு) எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு: குடி நீருக்கென்றே தயாரிக்கப்பட் பிளாஸ்டிக் போத்தல்கள்.

2. நமக்குக் கிடைக்கும் அசுத்தமான நீரை அந்தப் போத்தல்களில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும். அதிலிருக்கும் ஆக்ஸிஜன் வெளியேறும் வகையில் 20 விநாடிகள் குலுக்க வேண்டும்.

3. மிகவும் கலங்கிய நிலையில் நீர் இருந்தால் அதை வடிகட்டிக் கொள்வது நல்லது.

4. பின்னர் நீர் நிரப்பிய போத்தல்களைச் சாய்வான நிலையில் சூரியனைக் காணும் வண்ணம் பளபளப்பான அலுமினியக் கூரைகளில் வைத்து விட வேண்டும்.

5. சூரியனின் பார்வையில் ஆறு மணி நேரம் இவ்வாறு வைக்க வேண்டும்.

இதோ, சூரியனால் பதம் பார்க்கப்பட்ட சுத்தமான குடிநீர் தயார்! செலவே இல்லாத இந்த முறையை உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது என்பது ஒரு முக்கியமான தகவல் ஆகும்.

மேகமூட்டமான காலங்களில் ஆறுமணி நேரத்திற்கு மேலாகவோ அல்லது இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தோ வைத்திருத்தல் அவசியம் ஆகும். மேலும் அந்தப் போத்தல்களில் இருந்தே நீரைக் குடிப்பது சாலச் சிறந்தது.

இந்தோனேஷியாவில் இந்த முறையைப் பயன்படுத்தும் பொதுமக்கள்...


மேலும் விவரங்களுக்கு இங்கே காணுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக