திங்கள், 30 மே, 2011

குழந்தைகள் சாப்பிடுவது இல்லை

குழந்தைகள் சாப்பிடுவது இல்லை. அதுவும் பள்ளிக்கு சென்றுவிட்டால் "லஞ்ச் பாக்ஸை" திறக்காமல் அப்படியே கொண்டு வந்து விடுகிறார்கள். காலையில் கிளம்பும் அவசரத்தில் சரியாக சாப்பிடுவது இல்லை" என பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர் கவலை ஏராளம்.

சில பெற்றோர் பள்ளி ஆசிரியையிடம் "மதியம் சாப்பிடறானா என்று பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அன்பு கட்டளையிடுவதை பார்த்திருக்கிறோம்.

பள்ளிச் செல்லும் குழந்தைகள் எந்த மாதிரியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

காலையில் சாப்பிடாமல் குழந்தைகள் பள்ளிக்கு செல்லக்கூடாது. காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர் அருந்த செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு கப் பால் தர வேண்டும். ஒரு அவித்த அல்லது ஆம்லேட் செய்த முட்டை சாப்பிடலாம். வேறு எதாவது டிபன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மதியம் எந்த மாதிரியான உணவை கொடுத்து அனுப்ப வேண்டும்?

நூடில்ஸ் போன்ற உணவுகளை குழந்தைகள் விரும்புகின்றனவே.... பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, அவசரம் காரணமாக அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று பார்க்காமல் எதையாவது ஒரு உணவை திணித்து அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் நூடில்ஸ் போன்றவற்றை மதியம் தருவதை விட எப்போதாவது சாப்பிடலாம்.

என்ன உணவு தந்தாலும் அவசியம் காய்கறி சாலட் கொடுத்தனுப்ப வேண்டும். காரட், பீன்ஸ், முளை கட்டிய தானியம், பெரிய வெங்காயம், தக்காளி போன்றவற்றுடன் உப்பு, மிளகு சேர்த்து சாலட் செய்ய வேண்டும். சிறிதளவு சீனியும் சேர்க்கலாம்.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது?

ஒவ்வொரு நாளும் ஒருவகை உணவு தந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள உணவை விதம் விதமாக தர வேண்டும். நாம் விரும்பும் உணவை விட அவர்கள் விரும்பும் உணவை தரலாம்.

அவர்கள் சாக்லேட்டுகளை தானே விரும்புகிறார்கள்... சாக்லேட்கள் சாப்பிடுவது கெடுதியானது. சிறுகுழந்தையாக இருக்கும் போதே பழகி விட்டால் பள்ளிக்கு செல்லும் போது உணவில் நாட்டமில்லாமல் சாக்லேட் சாப்பிட விரும்பும். அதில் தேவையற்ற கலோரி உள்ளது. சத்து ஏதும் இல்லை. தயிர்சாதம் செய்யும் போது திராட்சை, மாதுளை, ஆரஞ்ச் இதழ்களை அதில் சேர்க்கலாம். கேரட் சேர்க்கலாம்.

இவை ஆரோக்கியத்திற்கும் நல்லது. குழந்தைகளை கவரும் விதமாகவும் இருக்கும். தினமும் ஒரு கப் கீரை தர வேண்டும். கீரை தனியாக சாப்பிட தயங்கும் குழந்தைகளுக்கு கீரை சப்பாத்தி, கீரை சேர்த்த அடை தோசை, கீரை புலாவ் போன்றவை தரலாம்.

பள்ளிக்கு சென்று களைத்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் எந்த மாதிரி உணவு தர வேண்டும்?

கடைகளில் கிடைக்கும் பாக்கெட் உணவுகள், வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களை தவிர்க்கலாம். சுண்டல், பயிறு, அவல் போன்றவை தரலாம். தேங்காய் துருவல் சேர்த்த அவல் உப்புமா மிக நன்று. ஒரு கப் பால் தரவேண்டும். பேக்கரி பொருட்களை தினமும் எடுத்துக்கொள்ளக்கூடாது. என்றாவது ஒரு நாள் சாப்பிடலாம்.

இரவில் எவ்வகை உணவு தர வேண்டும்?

இரவில் சாப்பிடாமல் படுக்க கூடாது. எண்ணெயில் பொரித்த உணவை இரவில் தவிர்க்க வேண்டும். காபி, டீ குடிக்க கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவினை தரலாம். பால் தரலாம்.

இரவில் கண்விழித்து படிக்க டீ, காபி சாப்பிட்டால் தூக்கம் வராது என்பது சரியா?

இது ஒரு மன ரிதியான எண்ணம். அறிவியல்பூர்வமாக அப்படி இல்லை.

குழந்தைகள் படிப்பிற்கும் உணவிற்கும் தொடர்பு உண்டா?

சரியான உணவு எடுத்துக்கொள்ளாத குழந்தைகள் சரியாக படிக்காது. சரிசம உணவு இல்லையெனில் பார்வை கோளாறு, தோல் நோய்கள், உற்சாகமின்மை ஏற்படும். கீரை, பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகளிடம் "சாப்பிட்டீங்களா" என்று கேட்பது போல் "தண்ணீர் குடித்தீர்களா" என்று கேளுங்கள்.

வாயு நிறைந்த குளிர்பானங்களில் உடலுக்கு தேவையற்ற அதிக கலோரி உள்ளது. இதனால் உடல் எடை கூடும். அவற்றை தவிர்க்க வேண்டும். பழத்தை ஜூசாக்கி குடிப்பதை விட பழமாகவே சாப்பிடுவது நல்லது.

அசைவ உணவுகளை சிறியவர்கள் சாப்பிடலாமா?

வளரும் குழந்தைகளுக்கு எல்லா சத்தும் தேவை. மீன், சிக்கன் போன்றவை சாப்பிடலாம்.

நமது ஊரின் விருப்ப உணவு இட்லியில் எத்தனை கலோரி உள்ளது?

(கலோரி என்பது உணவின் மூலம் கிடைக்கும் சக்தியின் அளவு) 50 கலோரி உள்ளது. அரிசியும் உளுந்தும் சேர்வதால் இட்லி உடலுக்கு நல்லதே. இட்லி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும், அதற்கு பதிலாக சப்பாத்தி சாப்பிடலாம் என்பது சரியல்ல. சர்க்கரை நோயாளிக்கு சாப்பிடும் அளவு தான் முக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக