ஞாயிறு, 13 ஜூன், 2010

மன அழுத்தம் வராமல் தடுக்க...


ஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு மனஅழுத்தமிருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.

பாரதியின் கதையைக் கேளுங்கள்.
இருபத்தேழு வயதுதான் பாரதிக்கு. தனியார் கம்பெனியில் வேலை. கைநிறைய சம்பாத்தியம். இருந்தும் ஏதோ ஒரு விரக்தி. ஒருநாள் கையில் அடிபட்டு ரத்தம் அதிகம் கொட்டி, மயக்கமாகிவிட்டதாக மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவரைப் பரிசோதித்த டாக்டருக்கு அதிர்ச்சி.

‘பாரதிக்குக் கையில் அடிபடவில்லை. அவர் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். கை நரம்பை அவராகவே துண்டித்திருக்கிறார்’ என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது முதலில் மறுத்தவர், பின்பு ஒப்புக்கொண்டார்.

‘‘டாக்டர்! எனக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை. அடிக்கடி என் வீட்டாரிடமே எரிந்து எரிந்து விழுகிறேன். மனசு படபடப்பாகவே இருக்கிறது. தொடர்ந்து களைப்பாக இருப்பது போன்றே உணர்கிறேன். பதற்றத்துடனே வேலைக்குப் போக வேண்டியதாக உள்ளது. எந்த நேரமும் எதைப் பற்றியாவது நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். பயம் வரும்போதெல்லாம் ‘நாம் ஏன் வாழ வேண்டும்?’ என்ற எண்ணம்தான் எழுகிறது’’ என்று சொல்லியிருக்கிறார்.

அவரைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு மனஅழுத்தம் இருப்பதை டையக்னஸ் செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து, ‘‘பாரதியின் மூளையில் உள்ள செரட்டோனின் (Serotonin) என்ற ரசாயனப் பொருளின் அளவு மிகக் குறைவாக இருக்கிறது. அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம்தான் இந்த பாதிப்புக்குக் காரணம்’’ என்றார்.

மனஅழுத்தம் என்றால் என்ன?
நம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன. இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை. கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும். பாரதிக்கும் இவை சமநிலையில் இல்லாததால்தான் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்கின்றன.

சில சமயம் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே சிலருக்கு மனஅழுத்தம் தீர்ந்துவிடும். அப்போது இந்த ரசாயனப் பொருட்கள் சமநிலைக்குத் தற்செயலாக வந்திருக்கும். அதனால்தான் பயம், படபடப்பு தானாகவே குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் போகின்றது. இது எல்லோருக்கும் சாத்தியமல்ல. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஷிஷிஸிமி குரூப் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். இது செரட்டோனின், டோப்பமின் போன்ற ரசாயனப் பொருட்களின் சுரப்பை குறைவாகவோ, கூடுதலாகவோ சுரக்கவிடாமல் சமநிலையில் வைத்திருக்கும்.

மனஅழுத்தத்தின் அறிகுறிகள்
இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருந்தால், அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எப்போதும் விரக்தியாகப் பேசுவது, அதிகமாகக் கோபப்படுவது, அதிக கவலை, தூக்கமில்லாமலிருப்பது, பசியின்மை, வயிற்றுப்போக்கு, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, ஏதோ நடக்கப்போகிறது என்கிற பயத்துடனேயே இருப்பது, தனிமையில் அழுவது, தேவையில்லாமல் பதற்றமடைவது, சோகமாகவே இருப்பது, நாம் எதற்கும் உபயோகமற்றவர் என்ற எண்ணம் தலைதூக்குவது, சில நேரங்களில் தற்கொலை எண்ணம் ஏற்படுவது... இவை யாவும் மனஅழுத்தத்திற்கான அறிகுறிகள்தான். எடை குறைவதும், தேவைக்கு அதிகமான எடை கூடுவதும்கூட மனஅழுத்தத்தின் அறிகுறிகள்தான் என்கிறார்கள்.

சிலருக்கு இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம் என்கிறார்கள். அளவுக்கு மீறிய மாத்திரைகளைச் சாப்பிடுவதும் இதற்கு இன்னொரு காரணம்.

வருமுன் காப்போம்
மனஅழுத்தம் வரும்முன் காக்க இயற்கையே நமக்குச் சில சிகிச்சைகளை அளித்துள்ளது.

உடற்பயிற்சி
மனஅழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் மிகப்பெரிய சிகிச்சை. பாரதிக்கு மருத்துவர்கள் மருந்துகளை மட்டும் பரிந்துரை செய்யவில்லை. உடற்பயிற்சிகளையும் சிகிச்சைகளாக அளித்ததால்தான் அவரால் இன்று சகஜ நிலைக்குத் திரும்ப முடிந்தது.

நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வாக்கிங் போவதும் நல்ல உடற்பயிற்சிதான். வாக்கிங் என்றால் 45 நிமிடங்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக நடக்க வேண்டும். அப்போதுதான் நமது உடலில் மீஸீபீஷீrஜீலீவீஸீ என்ற வேதிப்பொருள் சுரந்து, நல்ல மூடுக்குக் (விஷீஷீபீ மீறீமீஸ்ணீtமீ) கொண்டுவரும்.

யோகா
மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போகலாம். ஏதோ அரைமணி நேரம் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு, மற்ற நேரம் முழுக்க டென்ஷனாக இருப்பதில் அர்த்தமில்லை. வாழ்நாள் முழுக்க ஒருவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்குப் பலன் கிடைக்கும். தியானத்தின் மூலம் தனது அழுக்கை, குரூரத்தை, எரிச்சலை, அதிருப்தியை, கவலையை, விரக்தியை மாற்றிக்கொண்டால்தான் அது வாழ்வை வளப்படுத்தும்.

தனிமையைத் தவிர்த்தல்
கூடிய மட்டும் தனிமையைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்குப் பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.

இசை, புத்தகம்
நல்ல புத்தகங்களைப் படிப்பது மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் என்கிறார்கள். மனதிற்குப் பிடித்த இசையைத் தொடர்ந்து கேட்பது மிக நல்லது. மனம் வேறு சிந்தனைக்குப் போகாமல் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு.

உணவு
அசைவப் பிரியர்கள் மீன் சாப்பிடலாம். அதில் உள்ள ஒமேகா_த்ரீ என்ற கொழுப்பு திரவம் உங்கள் மனதை நல்ல மூடுக்குக் கொண்டு வரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தியானம்
கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம். கண்ணை மூடிய நிலையில் கடல் அலை, குளக்கரை, இயற்கை காட்சிகளென்று கற்பனை செய்து பார்ப்பது மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற உதவும்.

மன அழுத்தத்திற்கான மாத்திரைகள்
மனஅழுத்தத்தைக் குணப்படுத்தும் மாத்திரைகள் நிறைய உள்ளன. இதற்கு Selective Serotonin Reuptake inhibitors (SSRI) என்று பெயர். இந்த மாத்திரைகள் மூளையில் உள்ள செரட்டோனின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியவை. Prozac, Paxil, Zoloft ஆகிய மருந்துகள் SSRI வகையைச் சேர்ந்தவையே. இதை உங்கள் மருத்துவரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘‘முறையான மாத்திரைகள், உடற்பயிற்சிகள் ஆகிய இரண்டையும் உரிய காலத்தில் எடுத்துக் கொண்டதால்தான் என்னால் இன்று வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ள முடிகிறது. மனஅழுத்தம் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு என் மனம் பக்குவப்பட்டுள்ளது’’ என்கிறார் பாரதி. அவர் சொல்வது மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகத்தானே இருக்கிறது.

மனஅழுத்தத்தைத் தவிர்க்க சில வழிகள்:

1. உடற்பயிற்சி

2. யோகா, தியானம்

3. ஒமேகா த்ரீ கொழுப்புள்ள மீன்கள்

4. இசை

5. புத்தகம்

6. ஷிஷிஸிமி மாத்திரைகள்

இரா. மணிகண்டன்

மன அழுத்தம் - இனியும் வேண்டாம்

இன்றைய பரபரப்பான உலகில், சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் கூறுவது 'ஐயோ ரொம்ப டென்ஷனாயிருக்கு' என்பதுதான். இத்தகைய பதட்டமும் படபடப்பும் அதிகரிக்கும்பொழுது சிலருக்கு அது மன அழுத்தத்தில் வந்து முடிந்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு வரையிலான மன அழுத்தம் நேர்மறை மன அழுத்தம் எனப்படுகிறது. ஏனெனில் அது நம் செயல்திறன்அதிகரிக்க உதவுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும்பொழுது மன அழுத்தத்தைப் பற்றிக் கூறவும் வேண்டுமா என்ன? அதிகமான மன அழுத்தம் எதிர்மறையாக மாறி மனச் சோர்வையும், மன உளைச்சலையும் உண்டாக்கிவிடுகிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் ஏராளம். மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்னென்ன என்றும், மன அழுத்தத்தைத் தவிர்ப்பது எப்படி என்றும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.மன அழுத்தத்தால் ஏற்படும் தீமைகள்:

மன அழுத்தம் நம் உடலிலும், நம் மனப்போக்கிலும் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது. பொதுவாக மன அழுத்தத்தினால் உடலில் தோன்றும் மாற்றங்கள் நாளடைவில் பல நோய்களை உண்டாக்கிவிடக்கூடும். எனவே, மன அழுத்தம் ஏற்படும்பொழுதே அதை அறிந்து கொண்டு, தக்க உபாயங்களை மேற்கொண்டால், அபாயங்களில் இருந்து தப்பிக்கலாம்.

நாளாவட்டத்தில், மன அழுத்தம் ஏற்படுகையில் நமது உடலில் சுரக்கும் திரவமான கார்டிசால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து விடுகிறது. மேலும், இன்சுலின் சுரப்பை இது குறைப்பதால், சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலின் எடை கூடத் தொடங்குகிறது. இதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டு வலி போன்றவை நம்மைத்தாக்க வாய்ப்பு உள்ளது. உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவதன் காரணமாக, மற்ற பல வித நோய்களின் தாக்குதலுக்கும் நாம் ஆளாக நேரிடலாம்.

மன அழுத்தம் அதிகரிக்கையில், நம் சிந்தனை, நாம் பிறரிடம் பேசும்/பழகும் விதம் எல்லாமே மாறிவிடுகிறது.இதன் காரணமாக வேலைசெய்யுமிடத்திலும் வீட்டிலும் சண்டை சச்சரவு ஏற்பட்டு நிம்மதிக்குலைவு ஏற்படலாம்

நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கிறீர்களா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

ஐயோ! ஆயிரம் வேலை பாக்கியிருக்கிறது.. தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது என்று அடிக்கடி தோன்றுகிறதா? அடுத்தவர்கள் மீது கோபம் வருகிறதா? அடிக்கடி தலைவலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கு உள்ளாகிறீர்களா? படபடப்பும் பதட்டமும் ஏற்படுகிறதா? கவனம்.. நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கக் கூடும்.

இதயத்துடிப்பு அதிகரித்தல், தொடர்ச்சியான தலைவலி, அதிகமான வியர்வை, குறிப்பாக உள்ளங்கைகள் வியர்த்தல், மிக வேகமாக மூச்சு விடுதல்,வயிற்றுக் கோளாறுகள், முதுகு வலி, கழுத்திலும் இடுப்பிலும் ஏற்படும் தசைப்பிடிப்பு முதலியவை, அதிக மன அழுத்தத்தால் உடலில் பொதுவாக ஏற்படக் கூடிய அறிகுறிகள்.

சின்னச்சின்ன விஷயங்களைக் கையாள்வது கூடக் கடினமாகி விடுதல், சிறு தவறுகளுக்குக் கூட மிகுந்த எரிச்சலடைந்து கூச்சல் போடுதல், மிகவும் களைப்பாக உணர்தல், எதிலும் கவனம் செலுத்த இயலாமை, உப்புப் பெறாத விசயத்திற்கெல்லாம், மலையே இடிந்து விட்டது போல் கவலைப் படுதல், எதையோ இழந்ததுபோல் உணர்தல், ஏதாவது கெட்ட காரியம் நடந்துவிடும் என்று அச்சமடைதல், பிறரிடம் எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்தல் என்று நம் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

மன அழுத்தம் ஏற்பட்டிருப்பவர்கள் அதை எப்படிக் கையாளலாம்?

சிலருக்கு, தனக்கு மன அழுத்தம் இருப்பது புரியும். ஆனால் அவர்களில் ஒரு சாரார் அதை அலட்சியப்படுத்தவோ நியாயப் படுத்தவோ முற்படுவர்.
"கொஞ்ச நாளாக வேலைப்பளு அதிகரித்துவிட்டது, அதனால்தான் டென்ஷன்" என்றும், "இந்த வீட்டில் எல்லாமே ஏடாகூடமாகத்தான் இருக்கும்" என்றும் " என் அலுவலர் மோசம்/என் மனைவி (அல்லது கணவர்) அனாவசியமாக என்னைத் தொல்லைப் படுத்துகிறாள்(ர்)" என்றும் தமது மன அழுத்தத்திற்குப் பல காரணங்களைக் கற்பிப்பார்கள். தம் குறையை வெளிப்படுத்தவோ, சரி செய்துகொள்ளவோ முயற்சி செய்ய மாட்டார்கள்.

பிற வகையினரோ, தவறான வழிகளில் அதிலிருந்து விடுபட முற்படுவர். புகை பிடித்தல், மது அருந்துதல், எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பது அல்லது சாப்பிடாமல் பட்டினி கிடப்பது, தொலைக்காட்சி அல்லது கணிணியே கதியாகக் கிடப்பது, அதிகம் தூங்குவது, காரணமில்லாது நம் கோபத்தைப் பிறர் மீது காட்டுவது, அடி உதையில் இறங்குவது, தூக்க மருந்துகள் அல்லது போதைப்பொருட்களை உட்கொள்வது, செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப் போடுவது என பல விதமாக தமது மன அழுத்தத்தைக் குறைக்கவோ, திசை திருப்பவோ முயலுவர்.

இந்த இரண்டுமே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மோசமாக்கிவிடுகின்றன. இவற்றால் மனநிலையும் உடல் நிலையும் மென்மேலும் சீர்கேடு அடையத் தொடங்குகின்றன. பிறருடனான உறவும் நட்பும் கூட கெட்டுவிடுகிறது. எனவே, மன அழுத்தத்தைச் சரி செய்ய, சில சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதற்கு முதலில், சுய அலசல் தேவை. இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடவேண்டும் என்ற முனைப்பும், மாற்றங்களுக்குத் தயார் செய்துகொள்ளும் மனமும் வேண்டும்.

"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்". என்ற கண்ணதாசனின் வரிகளைக் கடைப்பிடிப்பதுதான் மன அழுத்தத்திற்கான சரியான மருந்து.

மனிதர்களின் உடலமைப்பு மட்டுமல்ல, மனப்போக்கும் வேறுபடக்கூடும். ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்பும் தனித்தன்மையுடையது. எனவே, மன அழுத்தத்திற்கான காரணிகளும், அதைப் போக்குவதற்கான வழிமுறைகளும்கூட மனிதருக்கு மனிதர் வேறுபடும். எனினும், சில பொதுவான யோசனைகளை தொடரும் கட்டுரையில் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக