ஞாயிறு, 13 ஜூன், 2010

கீரை+மரக்கறி+உப்பு - ஆரோக்கியக் குறிப்புகள்

உடல் ஆரோக்கியத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது. உங்களுக்கு உதவும் வகையில் சில கீரைகள், காய்கறிகள், மற்றும் உப்பு பற்றிய விளக்கம் இங்கே இடம் பெற்றுள்ளது.

காயசித்தி :
உடல் வளத்தைப் பெருக்கி பொன்நிற மேனியைக் கொடுத்து மன்மதனாக்கவல்ல மகோன்னத சக்தி மறைந்துள்ள கீரை மஞ்சள் பூ கரிசலாங்கண்ணியாகும். விழிக்கு ஒளியைப்பெருக்கிக் கொடுத்து, சிந்திக்கும் திறத்தைக் கூட்டிக் கொடுத்து அறிவாளியாக அரங்கேற்றி அழகு பார்க்கும் அற்புத மூலிகை. மஞ்சள்காமாலை, குன்மக்கட்டி போன்ற நோய்களை விரட்டியடித்து விடும். மொத்தத்தில் இது ஒரு காயகல்பம். எனவேதான் வடலூரார், இந்தக் கீரைக்கு ‘காயசித்தி’ என வாய்மொழிந்தார்.

தூதுவளை :
செவிமந்தம், செவி அழற்சி, காசம், உடல் நமைச்சல், மதரோகம், திரிகோஷம், உட்குத்தல், விந்து தானாகப் பிரிதல், இருமல், மூச்சுத்திணறல், கோழைகட்டுதல் ஆகியவற்றை வேரோடு கிள்ளி எறிந்து விடும். வெற்றியையே அள்ளித்தரும் அற்புதத் தமிழ்மூலிகை. அகத்தியரும் வள்ளலாரும் இதை ‘கபநாசினி’ என்று போற்றினர்.

பொன்னாங்கண்ணி:
விழியைப் பற்றிய வாதகாசம், பார்வையில் தடுமாற்றம், பக்கவாதம், மூலச்சூடு, ரோகம், பிலிகம் சொறிசிரங்கு, தேமல் போன்ற நோய்களைத் தடுத்து நிறுத்திடும். நோய்கள் கண்டால் இக்கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் பஞ்சாய்ப் பறந்து போகும். கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து தேக உஷ்ணத்தைச் சீராக வைத்திருக்கும்.

புளியாரை:
பித்தம்_மயக்கம்_தலைச்சுற்றல் மூலவாயு_வயிற்றுப்போக்கு பேதிவாந்தி இவற்றை நமது உடலைத்தீண்ட விடாது எதிர்த்து நிற்கும் ஓர் அற்புதக்கீரை. ரத்தத்தைச் சுத்தி செய்து கொடுக்கும் வல்லமை நிறையவே உண்டு. எனவே சித்தர் பெருமக்கள் ‘காயசித்தி’ ‘பித்தமார்த்தினி’ எனப் பாராட்டினார்கள்.

முருங்கைகீரை:
உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை. குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை ‘விந்து கட்டி’ எனப் பேசுகிறது.

பசளி:
சிறுநீர்க் கோளாறுகள், மூத்திரக்கடுப்பு, வாந்தி, மூத்திரக்காய்கள் கோளாறு இவற்றைக் களையவல்ல அற்புத மருத்துவ சஞ்சீவி. கால்சியம், பாஸ்பரஸ். சோடியம் குளோரின் வைட்டமின் ஏ.பி.சி.; புரதம் வெஜிடபிள் ஹீமோகுளோபின் அமீன் ஆசிட் போன்ற கணக்கற்ற ஊட்டச்சத்துக்களை ஒருசேர உள்வாங்கிக் கொண்ட கீரைகளில் அரசன். மொத்தத்தில் இது ஒரு தங்க பஸ்பம். முறையாக உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் ‘சிறுநீரகக் கோளாறு’ உங்களைச் சீண்டிப் பார்க்கவே அச்சப்பட்டு வெளியே நின்று தன்னைத்தானே விலங்கிட்டுக் கொள்ளும். இது சத்தியம்.

காய்கறிகளைவிட கீரைகளில் பசுமைச்சத்து இருப்பதால் பல்வேறு நன்மைகள் வந்தடைகின்றன. இதில் உள்ள தாதுப் பொருள்கள் பெரும்பாலும் காரத்தன்மை உடையவை. இதனால் நமது உடலில் சேரும் கழிவுப்பொருள்களை வெளியேற்றிட ஒரு உந்துசக்தியாக இருக்கிறது.

காய்கறிகள்:
அவரை, முருங்கை, தூதுவளங்காய், அத்திக்காய், முள்ளிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, பேயன், வாழைத்தண்டு, கொத்தவரைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளைப் பூசணிக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பச்சைப்பட்டாணி, தக்காளி வெள்ளரிக்காய் போன்ற காய்களை மூடிய பாத்திரத்தில் மிதமாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது. மேற்கண்ட காய்கறிகள் சிலவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளில்தான் நார்ப்பொருள்கள் அதிகமாக உள்ளன. வெள்ளரிக்காய் கோடைக் காலத்திற்கு உகந்தது. நமது வயிற்றில் உண்டாகின்ற புளிப்புத் தன்மையைக் கட்டுப்படுத்தும் சக்தியை வெள்ளரி தனக்குள்ளே சேமித்து வைத்திருக்கிறது.

காரத்தன்மையால் உடலில் உண்டாகின்ற, புளிப்புத் தன்மையால் உண்டாகின்ற அசுத்தப் பொருள்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்த உயிர் அணுக்களை உற்பத்தி செய்கின்ற உந்து சக்தி உள்ளது. ரத்த உயிரணுக்களின் சேர்க்கையில் மிக அதிகமாகஉள்ள உப்புப்பொருளான பொட்டாசியம் குளோரைடு பொட்டாசியம் பாஸ்பேட் அதிகமாக உள்ள ஓர் அற்புதமான காய் வெள்ளரிக்காய்.

நாம் உட்கொள்ளும் Methionine புரதம் உடலில் Homocy Stein என்ற நஞ்சாக மாறுகின்றது. இந்த விஷப் பொருள் உடலின் இருதயத்துடிப்பையும் இருதயத்தையும் பெரிதும் பாதிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த ஹோமோசிஸ்டின் என்ற நச்சுப் பொருளை வெளியேற்றும் சக்திவைட்டமின் ‘‘பி6’’_ல் உள்ளது என அறிவியல் அறிவித்துள்ளது. இத்தகைய சக்தி அதிகமாக உள்ள பேயன் வாழைப்பழம், ரஸ்தாளிப்பழம் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், மாதுளை, பேரீச்சை இவற்றை உண்பது உத்தமம்.

மாங்காய், கொய்யா, பலாப்பழம் இவற்றை வெகுவாகக் குறைத்துக் கொள்வது நல்லது. பால், பலா, மாம்பழம், மீன், கோழி இவை ஒன்றுக்கொன்று எதிர்மறை சக்திகளை உருவாக்கும் முரண்பாடுகள் கொண்டவை. பேதி வாந்தி சிலநேரங்களில் உயிருக்குக் கூட கேடு வந்து சேரலாம். இவற்றை ஒன்றோடு ஒன்று சேர உதவிடாதீர்கள். எச்சரிக்கைமிக தேவை.

கேரட், பீட்ரூட், டர்னிப், நூக்கல், உருளைக்கிழங்கு இவற்றைச் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு தவிர்ப்பது நல்லது.

சுண்டக்கடலை, தட்டப்பயிறு, மொச்சைப் பயிறு, இவற்றைச் சிறிதளவாக வாரத்திற்கு ஒருமுறை பகல் பொழுதில் சேர்த்துக் கொள்வது தவறு இல்லை.

நிலக்கடலை, முந்திரி, பாதம், பிஸ்தா பருப்பு, சாரப்பருப்பு வகைகளில் கொழுப்புச்சத்து விஞ்சி இருப்பதால் தனியாகச் சாப்பிடக்கூடாது. மாதத்திற்கு இருமுறை ஏதாவது உணவோடு கலந்து சிறிய அளவே உண்ணவேண்டும்.

முளைகட்டின துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு, ஜீரகம், வெந்தயம், இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை.

பசுவின் தயிர், மோர், நெய் சேர்த்துக்கொள்வதில் தண்ணீர் கலந்த மோர் சிறப்பானது.

கடையிலே விற்கப்படுகின்ற ஊறுகாய்வகைகளை ஒதுக்குங்கள் வீட்டிலேயே காரம் எண்ணெய் அதிகம் சேர்க்காது, உப்பு மிகமிகக் குறைவாகச் சேர்த்து தயாரித்துக் கொள்வது உத்தமம். எலுமிச்சை, நார்த்தங்காய், பூண்டு, நெல்லிக்காய், மாஇஞ்சி, பச்சைமிளகு மாவல்லிக்கிழங்கு (நன்னாரி), இவை உங்களது ஊறுகாய்களுக்கு மூலப் பொருளாக இருத்தல் அவசியம்.

உப்பு:
நாம் சாப்பிடுகின்ற எல்லா உணவு வகைகளிலேயும் ‘உப்பு’ வஞ்சனை இல்லாமல் நமக்கு சுவையைக் கூட்டிக்கொடுத்து மறைமுகமாக ‘நஞ்சினை’ உடலுக்குள் கூட்டி வருகிறதை நாம் மறந்து விடக்கூடாது. ‘உப்பே தப்பு’ என்பார்கள் தமிழ் மூலிகை மருத்துவர்கள். உப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது கடல் உப்பே. உப்பில் சோடியம் குளோரைடு வெகுவாக உள்ளது. உங்கள் உடலில் ஏதாவது ரத்தக்காயம் ஏற்பட்டால் அதில் கொஞ்சம் உப்பை வைத்துப்பாருங்கள். தாங்க முடியாத எரிச்சல் இருக்கும். அந்த அளவிற்கு வீரிய சக்தி கொடுக்க வல்லது உப்பு. இந்த மாற்றமே நமது குடலிலேயும் உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்ற போது ஏற்படுகின்றது.

ஆனால், இந்த உபாதையை நம்மால் உணர இயல முடியவில்லை. காரணம், நமது நாக்கின் ருசியே அந்த எரிச்சலை அரண் போட்டு உணரவிடாது தடுத்துவிடுகிறது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கின்றேன். நீங்கள் சாப்பிடுகின்ற 1 கிராம் உப்பின் எரிச்சலைப் போக்க 70 கிராம் தண்ணீர் குடித்தால் தான் உப்பின் நஞ்சுத் தன்மையைப் போக்க இயலும் என மேலை நாட்டு மருத்துவக் குறிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உப்பு அதிகமாகச் சேர்த்துக் கொள்வதால் உடலின் எடை கூடுகிறது. உப்பே இல்லாது உணவை உட்கொள்ளப் பழக்கிக் கொள்வது நல்லது. துவக்கத்திலே உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும் உங்கள் உடலின் பகுதிகளில் சிறுநீரகத்தில் தான் உப்பு தேக்கமாகிறது. அதை நாம் குடிக்கின்ற தண்ணீராலேயே அன்றாடம் வெளியேற்றுகின்றோம். உடலில் உப்புச்சத்துக் குறையக் குறைய உங்களது எடையும் சீராகவே இருக்கும்.

கடற்கரைச் சாலைகளில் உள்ள வானுயர்ந்த கற்கோட்டைகள் எல்லாமே அரித்து அரித்து உதிர்வதைப் பார்க்கின்றோம். கற்கோட்டைகளையே அரித்து விடுகின்ற உப்பு உங்களது உடலை விட்டு வைக்குமா? சிந்தித்துப் பாருங்கள்.

நம்மில் பலர் உப்பில்லா உணவு நமது நினைவாற்றலைக் குறைக்கும் என்று தப்புக் கணக்குப் போடுகின்றனர். இது தவறு. உப்பு உங்களது சிறுநீரகத்தை இயங்காது தடுத்து விடுவதோடு, மூளை வளர்ச்சியையும் பெரிதும் பாதிப்படையச் செய்து விடுகிறது.

ஆங்கில மருத்துவம் இந்த வகையில் நம்மைக் குழம்புகிறது. சில நேரங்களில் உப்பு தேவை என வாதிடுகிறது. இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் சுவடு தெரிந்துவிட்டால் உப்பை நிறுத்துங்கள் என சிவப்புவிளக்கை கையிலே தூக்கிப் பிடிக்கிறது. ஒரு கையிலே பச்சை விளக்கையும் மற்றோர் கையில் சிவப்புக் கொடியையும் பிடித்து நம்மை குழப்புகிறது.

உப்பின் அறிவியல் பெயர் சோடியம் குளோரைடு. மனித உடல் வளர்ச்சிக்கு இரும்பு பொட்டாஷ், கந்தகம், கால்சியம் தேவைதான் உப்பை மனிதனால் ஜீரணிக்க இயலாது. உப்பை உண்பதால் மனிதனது சிறுநீரகம், கல்லீரல், இதயம், இரத்தக் குழாய்கள், மூளை வெகுவாக பாதிக்கப்படுகின்றன என அமெரிக்க மருத்துவர் பால் பேக்கர் தெரிவிக்கின்றார்.

உப்பு சாப்பிடுவதால் நரம்புகளில் எரிச்சலை உண்டாக்குகிறது. நமது உடலில் உள்ள கால்சியத்தைத் திருடி பற்களையும் எலும்புகளையும் சக்தி இழக்கச் செய்துவிடுகிறது. நமது குடலில் உள்ள லேசான சவ்வுகளை அரித்து குடற்புண் பிராங்கைடிஸ் போன்ற நோய்களை மிகச் சுலபமாக பதியவைக்கிறது இந்தப் பொல்லாத உப்பு. எனவே இன்றிலிருந்து உப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து முற்றிலும் அகற்ற முயற்சி செய்யுங்கள்.

சரி உப்பு வேண்டாம். நமது உடலுக்கு உப்புச் சத்து வேண்டாமா? என்று நீங்கள் இதழ் மூடி முணுமுணுப்பது தெரிகிறது. உப்புச் சத்துக்கள் உள்ள இயற்கை உணவுகளை உண்பதில் தவறில்லை. நமக்காகவே நமது சித்தர்களும் மேலைநாட்டு மருத்துவமும் வாய் மொழிந்தவை இதோ!

மூளைக்கீரை, வாழைத்தண்டு, கீரைத்தண்டு, முள்ளங்கி, காரட், சௌசௌ, வெண்பூசணி, வெங்காயக்கீரை, முட்டைக்கோஸ் நூல்கோல் வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு, ஆப்பிள், திராட்சை, வெங்காயம், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய் போன்றவற்றை உணவோடு சேர்த்துக் கொண்டால் நமக்கு கிடைத்துவிடுகிறது. உங்கள் நலத்திற்குத் தேவையான உப்பு சத்து இயற்கை உணவிலேயே உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சுகமான வாழ்வுக்கே நீங்கள் சொந்தக்காரர் ஆவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக